Posts

Showing posts from August, 2011

விட்டுச் சென்றாளோ?

காதலனை, கனவு மங்கைக்காக விட்டுச் சென்றாளோ? கண்ணாளனை, கண்மணிக்காக விட்டுச் சென்றாளோ? தன் அவனை, தோழிகளுக்காக விட்டுச் சென்றாளோ? என்னவனை, எனக்காக விட்டுச் சென்றாளோ? அவளுக்காக விட்டு செல்கிறேன் என் உயிரில் ஒரு பாதி அவளின் தேவதையான அவன் பிள்ளை !... - தன் கணவனின் காதலிக்கு, மனைவி எழுதுவது ...

தரமறுத்தேன்

அவன்: கன்னங்கள் தந்துப் போ காகிதம் மென்மை இல்லை ... புன்னகை சிந்திப் போ வண்ணங்கள் போதவில்லை ... கூந்தலை தந்துப் போ தூரிகையில் உயிர் இல்லை ... எண்ணங்கள் தீட்டுகின்ற என்னவள் ஓவியம் !!! அவள்: கன்னங்கள் தரமறுத்தேன் கள்வனின் எண்ணங்கள் தெரிந்து ... புன்னகை தர மறுத்தேன் பூக்களின் வெட்கங்கள் தெரிந்து ... கூந்தல் தர மறுத்தேன் இவ்வுலகமே இருளும் என்று ... என்னைத் தர மறுத்தேன் நான் உன்னுடையவள் இல்லை என்று தெரிந்து !!!

காதல் கூடு !

அவன்: சிட்டுக்குருவியின் பிரிவை எண்ணி பட்டு போன மரங்கள் இல்லை ... காதல் கூடு களைந்து விட்டால் இன்னொரு கூட்டில் இடமா இல்லை? இவள்: பறவைக் கூட்டில் இடம் ஒன்று காட்டி தழுவ மனம் உண்டு ! கவிஞன் சொன்ன சொற்கள் கேட்டு சாய்ந்து இளைப்பாற தோள்கள் உண்டு !

உன் பெயர் !

ஊமையாகிய நான் ... ஓசையின்றி ... வண்ணமின்றி ... ஓர் ஓவியம் தீட்டினேன் ... தித்தித்ததே !.. உன் பெயர் ஒரு காகிதத்தில் !...

நிலவு !

நிலவை மிக அருகினில் கண்டதுண்டோ ? என் அருகினில் வா ... என் கண்களில் தெரியும் நிலவின் பிம்பம் !...

அள்ளி நிரப்பினால் ?

அள்ளி நிரப்பினால் - முத்தங்களும் வெறுத்து போகும் அள்ளி நிரப்பினால் - பசியும் மறந்து போகும் அள்ளி நிரப்பினால் - காதலும் கசந்து போகும் அள்ளி நிரப்பினேன் - என்னை வெறுத்து விட்டாயா?...

கருவும் காதலும் !

மெல்லிய இரவில் அவன் காதோரம் சென்று ... என் கைகளால் அவன் தலைமுடி கோதி ... ஆதரவாய் அவன் தோள்களில் சாய்ந்து ... அவன் கைகளை மெல்ல எடுத்து என் வயிற்றினில் வைத்தேன் !... காதல் சொல்லும் போது புரியாத அதே உணர்வு போலும் ... சட்டென்று புரியவில்லை அவனுக்கு !... அசைவைக் காட்டியதும் புரிந்துக் கொண்டான் ... ஆயிரம் படைவீரர்களை தனியே நின்று ஜெயித்தது போன்ற ஒரு உணர்வு மகிழ்ச்சியும் பெருமிதமும் அவனுக்கு உயர்ந்து நிற்க ... நான் தலை குனிந்தேன் ... முகத்தை நிமிர்த்தினான் ... கண் திறக்க முடியாத வெட்கத்திலும் நான் மெல்ல கண் திறந்தேன் உதடுகள் துடித்தன.. அவன் கண்களில் இருதுளி நீர் ... நான் அவனிடம் என்னை முழுவதும் உணர்ந்த போது இருந்த அதே துளிகள் அந்த இருதுளி கண்ணீரே அவன் காதலை சொல்லியது !... இன்னும் ஏன் காத்திருக்கிறேன் ? நான் தயார் !... மரணமே வா ... உன் படை சூழ வா ... நான் கண்டது கனவாகும் முன்பு வா ... என்னை கொண்டு செல் ... என்னை கொன்று செல் ... இந்த நிமிடத்தை உறைய வைக்க வேண்டும் வா ... வரம் வாங்கி வா ... அவன் மடியில் என் உயிர் பிரிய ஒரு வரம் !...

கவிதைப் புத்தகம் !

மழலை உதட்டின் நிறத்தினிலே புத்தகம் ஒன்றை அவன் தந்தான் ... மனம் போல வார்த்தை அமைய விதியொன்றை அவன் தந்தான் ... விரல் பிடிக்கும் ஆறாம் விரலாய் எழுதுகோல் ஒன்றை அவன் தந்தான் ... இவையனைத்தும் எழுத தூண்டும் கவிதை ஒன்றை தருவானோ !...

உன் தேவதை !

வெடிக்கும் எரிமலையின் சாரலையும் தெறிக்கும் மின்னலின் துளிகளையும் கொண்டு செய்த உன் காதலியை ... சொர்க்கத்தில் பூத்த பனிப்பூவை எடுத்து இதழ்கள் விரித்து பன்னீர் தெளித்து அதனுள் அமர்த்தி தருகிறேன் ... நீ வாடாமல் பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் !...

உன் கவிதை !

தவித்த பறவைக்கு தண்ணீர் காட்டும் கருணை ... அணைந்த நிலவிற்கு சூரியன் காட்டும் கருணை ... கழிந்த பொழுதுக்கு தலையணை காட்டும் கருணை ... இவைகளை எல்லாம் தாண்டியதல்லவா நீ ஏவிவிட்ட கவிதை !...

பயணம் !

இரு வாரம் கழித்து, ஒரு நாள் பயணம் தோழனுடன் கைகோர்த்து, நெடுந்தூரம் செல்கிறேன் போகும் வழியெங்கும், ரசித்து செல்கிறேன் கடக்கும் தூரத்துக்கு, கவிதை பாடி செல்கிறேன் அன்று போல் இல்லாமல், இன்று பத்திரமாய் செல்வேன் என்ற நம்பிக்கையில் நான் தொடங்கும் இந்த பயணம் சிங்கார ஊருக்கு மட்டும் அல்ல...

சிரிக்கிறேன் !...

பாதி கண்கள் மூடி... அருகினில் உன்னைத் தேடி... என் உயிருக்குள் ஓடி... நீ செய்த காயங்கள் கோடி... இப்போது சிரிக்கிறேன் என் இதழ்களின் கோடுகள் கூடி...

விருந்து !...

நண்பர்களுடன் ஒரு நாள் ... நிறையப்போகும் வயிற்றுக்காக அல்ல நிறையவிருக்கும் மனசுக்காக !..

உன் நினைவுகள் !...

உன்னை விட உன் நினைவுகள் மேலானவை ...! ஏனென்றால் அவை என்றும் எனை விட்டு பிரிய நினைப்பதில்லை...!